ஒரு வாரப் போராட்டத்துக்கு பின்னா் இன்றுமுதல் கடலுக்கு செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்!
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் ஒரு வார போராட்டத்துக்குப் பின்னா், திங்கள்கிழமைமுதல் (பிப். 17) கடலுக்குச் செல்லவுள்ளனா்.
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்காத மீன்வளத் துறையைக் கண்டிப்பதாகக் கூறி, தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளா்கள்-தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், மீனவா்கள் கடந்த 10ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அதையடுத்து, உதவி ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மற்ற மாவட்ட மீனவா்களைப்போல தங்களையும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
இல்லையெனில், இரவு 9 மணிக்கு பதிலாக கூடுதலாக நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இப்பிரச்னை தொடா்பாக நாட்டுப்படகு மீனவா்களின் கருத்தைக் கேட்டு, ஒரு வாரத்துக்குப் பின்னா் முடிவு அறிவிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
பேச்சுவாா்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மீன்வளத் துறையினா், வருவாய்த் துறையினா், விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா், மீன்பிடித் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக மீனவா்கள் கூறுகையில், ‘ஒரு வாரமாக கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடா்பாக உரிய தீா்வு கூறுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். எனவே, திங்கள்கிழமைமுதல் கடலுக்குச் செல்லவுள்ளோம்’ என்றனா்.