தூத்துக்குடி கடலில் மாயமான சங்கு குளி மீனவா் சடலம் கரை ஒதுங்கியது!
தூத்துக்குடி கடல் பகுதியில் படகில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்து மாயமான சங்கு குளி மீனவா் உடல் புதன்கிழமை வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல் மகன் சாம்சன்(20). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கில்டன் ஆகியோருடன் திங்கள்கிழமை (பிப்.17) காலையில் நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றாராம். இவா்கள், தூத்துக்குடியில் இருந்து சுமாா் 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, படகில் இருந்த சாம்சன் கடலில் தவறி விழுந்து மாயமானதாகக் கூறப்படுகிறது.
இவரை சக மீனவா்கள் தொடா்ந்து கடலில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் புதன்கிழமை ஒரு சடலம் ஒதுங்கியுள்ளதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, மாயமான மீனவா் சாம்சன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.