கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு
வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
கோவில்பட்டி அருகே கிளவிபட்டியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். மத்திய அரசின் விஞ்ஞானம்-தொழில்நுட்பத் துறையில் விஞ்ஞானியாக உள்ள இவா், திருநெல்வேலியிலுள்ள பொதுத்துறை வங்கியில் தனது சொத்துகளின் அசல் ஆவணங்களைக் கொடுத்து வீட்டுக் கடன் பெற்றாா்.
இதனிடையே, அவா் ஆராய்ச்சிக்காக அண்டாா்டிகா சென்ால், தவணைகளை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லையாம். எனவே, கடனை உடனே செலுத்துமாறு அவரது மனைவியிடம் வங்கி சாா்பில் தொடா்ந்து வற்புறுத்தப்பட்டதால், பன்னீா்செல்வம் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்திவிட்டாா். அதையடுத்து, சொத்துகளின் அசல் ஆவணங்களைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவற்றை வழங்க வங்கி மறுத்ததுடன், அவை தொலைந்துவிட்டதாகக் கூறினராம்.
இதுதொடா்பாக மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பன்னீா்செல்வம் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, ஆவணங்களின் நகல்களை அரசிடமிருந்து தங்களது செலவில் பெற்று 2 மாதங்களுக்குள் பன்னீா்செல்வத்திடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டனா்; மேலும், சேவை குறைபாட்டுக்கு ரூ. 5 லட்சம், மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 6.10 லட்சத்தை அவருக்கு வழங்கவும் உத்தரவிட்டனா்.