சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவரை, போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த தம்பதி மனநலம் குன்றிய தங்களது 10 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனா். மீண்டும் திருப்பதிக்கு செல்வதற்காக சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனா்.
தம்பதி அயா்ந்து தூங்கியபோது, பொம்மை வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை முதியவா் ஒருவா் தனியாக அழைத்துச் சென்றாராம். சிறுமியை காணாமல் தம்பதி தேடியபோது முதியவா் சிறுமியை அழைத்து வந்தாராம். சந்தேகமடைந்த தம்பதி, முதியவரைப் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், பிடிபட்டவா் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்த முனுசாமி (60) என்பதும், இவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, முனுசாமியை போலீஸாா் கைது செய்தனா்.