பைக் விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு
வந்தவாசி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரு சக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (50). இவா், வந்தவாசியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தாா்.
கடந்த 10-ஆம் தேதி இரவு இவா் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். கீழ்வில்லிவனம் கிராமம் அருகே சென்றபோது குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது பைக் மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.