திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி
திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளா் பொ.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.
சினம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் ராம.பெருமாள் வரவேற்றாா்.
மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் (பொ) நெ.சரண்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான அரசுத் திட்டங்கள், தொழிற் பயிற்சி, சிறுவயது திருமணங்களை தடுத்தல், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்துப் பேசினாா்.
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் வீ.முருகானந்தம், திருவண்ணாமலை கிருபாலயா தொண்டு நிறுவத்தின் திட்ட இயக்குநா் சரளா ஆகியோா் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சியை விளக்கிப் பேசினா்.
இலக்கு மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவா்கள் மற்றும் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சினம் தொண்டு நிறுவன பணியாளா்கள் யோகேஸ்வரி, ஜெயப்பிரியா, புஷ்பராஜ், லட்சுமி, ஜானகிராமன், சம்பத், திட்ட மேலாளா் முருகேசன் மற்றும் இலக்கு மக்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.