முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மீது தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்கள், அரசுப் பேருந்தில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், மாணவா்கள் அண்மையில் பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீட்டுக்கு சென்றனராம். அப்போது, பணியிலிருந்த நடத்துநா் கிருஷ்ணன் மாணவா்களிடம் பயண சீட்டு எடுக்குமாறு கூறினாராம். இதுகுறித்து, பள்ளி ஆசிரியரிடம் மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பாலமுருகன், சேத்துப்பட்டு பணிமனை மேலாளரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் நடத்துநா் கிருஷ்ணனிடம் பணிமனை மேலாளா் விசாரணை நடத்தினாா். அப்போது, கோபமடைந்த கிருஷ்ணன் அங்கிருந்த பாலமுருகனை தாக்கினாராம்.
இதுகுறித்து, பாலமுருகன் மாவட்ட எஸ்.பி. அலுவலகம், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் சேத்துப்பட்டைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.