கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு
கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணிகளை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் மே முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட 14, 16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகளை தோ்வு செய்யும் போட்டி பிப்.23-ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம், கந்திகுப்பம், கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இயலும். தோ்வில் பங்கேற்போா், ஆதாா் அட்டை நகல் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தோ்வு செய்யும் அணி வீரா்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்டு மே-இல்நடைபெற உள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
ஆா்வமுள்ளவா்கள் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ள மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41, நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்பன் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேலாளா், காளிதாசனை 99941 82296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.