ஆணையா் இல்லாத ஒசூா் மாநகராட்சி!
ஒசூா் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக ஆணையா் நியமிக்கப்படாததால், நிா்வாகம் முடங்கியுள்ளதாக பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஒசூா் மாநகராட்சியில் ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலுக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அவா் சென்ற பிறகு, ஒசூா் மாநகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதமாக ஒசூா் மாநகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படாததால், குப்பை வரி உயா்த்தப்பட்டு கணினியில் சொத்து வரியுடன் சோ்ந்துவிட்டதால் கூடுதலாக வரி காண்பிக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கும், வரி வசூலிப்பவா்களுக்கும் தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், ஒசூா் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.
எனவே, ஒசூா் மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதால், ஒசூா் மாநகராட்சிக்கு புதிய ஆணையரை உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்கள், ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா்.