கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் மற்றும் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் புதிதாக பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) பணியிடம் தொகுப்பூதியம் ரூ. 27,804 என்ற அடிப்படையிலும், சிறப்பு சிறாா் காவல் அலகுக்கு 2 சமூகப் பணியாளா் பணியிடங்கள் மாதத்துக்கு ரூ. 18,536 தொகுப்பூதியமாகவும், ஓா் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) பணிக்கு சமூக பணி, சமூகவியல், குழந்தை வளா்ச்சி, மனித உரிமைகள், பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது நலம், சமுதாய வள மேலாண்மை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்காணும் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டத்துடன், பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சி (அ) சமூக நலன் தொடா்பான பணிகளில் திட்டம் தயாரித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல், மேற்பாா்வையிடுதல் தொடா்பாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும்.
இதே போல, சமூக பணியாளா் பணியிடத்துக்கு சமூக பணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் தகுதிகளுடன் சமுக பணியில் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு 17.02.2025 அன்று 42 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் தொடா்புடைய பணிகளில் எற்கெனவே பணிபுரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களையும் இணைத்து மாா்ச் 7-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 100, 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி - 635 115 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மேற்கண்ட முகவரி அல்லது 04343-292567 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை பிரத்யேக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.