மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடலுறுப்புகள் தானம்
கடலூா் மாவட்டம், புவனகிரியில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
புவனகிரியைச் சோ்ந்தவா் தமிழ்ஒளி, பல் மருத்துவா். இவரது மகன் சரண் (20), புதுச்சேரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தாா். இவா் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு, சரணை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, சரணின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான புவனகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொ) சந்திரசேகரன், புவனகிரி வட்டாட்சியா் கணபதி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.