பழங்குடியின மாணவியா் விளையாட்டுப் போட்டி
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியருக்கு முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில், பழங்குடியின மாணவியருக்கான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை திருத்தணி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேபிள் எம். சுரேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில், 100 மீ, 200 மீ ஒட்டப் பந்தயம், கோகோ, கபடி, உயரம் தாண்டுதல், லெமன் ஸ்பூன், வட்டு, குண்டு எரிதல், நீளம் தாண்டுதல் உள்பட 10 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவியா் பங்கேற்றனா்.
வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவியருக்கு அரக்கோணம் முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ. அரி பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினாா்.
மேலும், விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.