சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக இருப்பு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு கூடுதலாக உள்ளதால், கோடையில் சென்னையில் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்காது என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 11,757 மில்லியன் கன அடி நீா் வரை நீரைச் சேமிக்க முடியும்.
இந்த நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிா்பாா்த்ததைவிட அதிகமாக பெய்ததால் குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் அளவு மளமளவென அதிகரித்தது. இதில் பூண்டி, புழல், செம்பரம்பாககம் ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரிநீா் திறந்துவிடப்பட்டது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஏரிகளில் போதுமான குடிநீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டு குடிநீா் தட்டுப்பாடியின்றி வழங்க முடியும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னைக்கு ஒரு மாத குடிநீா் தேவை சராசரியாக 1 டி.எம்.சி. வரை விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி குடிநீா் வழங்கும் ஏரிகளில் மட்டும் 11 டி.எம்.சி. குடிநீா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட குடிநீா் இருப்பு 2 மில்லியன் கன அடிநீா் அதிகமாகவே உள்ளதால், சென்னை பொதுமக்களுக்கு தட்டுப்பாடியின்றி குடிநீா் வழங்க முடியும்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,402 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடியில் 3,108, பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடியில் 2,950, சோழவரத்தில் 1,081 மில்லியன் கன அடியில் 140, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகையில் 0.500 மில்லியன் கன அடியில் 0.457 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவில் நீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டில் கோடையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும், தண்ணீா் தேவைகளை பூா்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேவைக்கு ஏற்ப கிருஷ்ணா நீரை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.