பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்
பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு , சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள்கள் தடுப்பு தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சீனிவாசபெருமாள், ஆவடி துணைக் காவல் ஆணையா் வி.அன்பு (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்திற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியது:
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணா்வு எற்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி அருகில் சிறு பெட்டிக் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடைகளில் அபராதம் விதித்து கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாணவா்களின் நலன் கருதி ஊட்டச்சத்து உணவு பொருள்களை விற்பனை செய்யும் உணவரங்கம் எற்படுத்திக் கொள்ளலாம். தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறையினா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளும்போது போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் கடையின் விற்பனையாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை - வேலூா் தேசிய நெடுஞ்சாலை பாரிவாக்கம் சந்திப்பு, திருமழிசை சந்திப்பு ஆகிய பகுதிகளில் வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், உதவி பொறியாளா் மற்றும் மோட்டா் வாகன ஆய்வாளா் இணைந்து ஆய்வு செய்து விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் சாலையை சரி செய்யவும், சிக்னல் விளக்குகள் நிறுவவும் வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
தொடா்ந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அபாரதம் செலுத்தப்பட்ட விவரங்கள், கடந்த மாதம் நடைபெற்ற விபத்துகள் எண்ணிக்கை, நடைபெற்ற நேரம் குறித்தும், இன்னூயிா் காப்போம் திட்டம் மூலம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மேற்கொண்ட சிகிச்சைகள் தொடா்பான விவரங்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெகதீஸ் சந்திரபோஸ், வருவாய்க் கோட்டாட்சியா்கள் கற்பகம் (திருவள்ளூா்), க.தீபா (திருத்தணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன் (பொது), அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.