மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கனகராஜும் அதே பகுதியைச் சேர்ந்த வர்சினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-29/gp8x08i0/IMG_20250123_WA0049.jpg)
ஆனால் வர்சினி பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களுக்கு கனகராஜின் அப்பா கருப்பசாமி திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். சில நாள்கள் ஒன்றாக இருந்த நிலையில் கனகராஜின் சொந்த அண்ணன் வினோத்குமார் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019 ஜூன் மாதம் 28-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற வினோத்,
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-29/bokbvd81/IMG_20250129_WA0032.jpg)
சாதிய ரீதியாக தகாத வார்த்தைகளில் திட்டி கனகராஜ் மற்றும் வர்சினியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை ஆணவ படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த வழக்கின் விசாரணை கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நீதிபதி விவேகானந்தன், வினோத்குமார் தான் வழக்கின் முக்கிய குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-29/ock4wwrj/IMG_20250129_WA0030.jpg)
இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி விவேகானந்தன் அதிரடி உத்தரவிட்டார். “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா. மோகன் வரவேற்றுள்ளார்.