செய்திகள் :

ஆளுநர் வழக்கு: `நல்லவர்களாக இல்லாவிட்டால்..!’ - அம்பேத்கர் வாக்கியம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்

post image

``தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய 10 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது. 'அரசியல் சாசனத்தை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அரசியல் சாசனம் மோசமானதாகவே இருக்கும்'" என அம்பேத்கர் வாக்கியத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு

10-க்கும் மேற்பட்ட மசோதா

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தமிழ்நாடு ஆளுநர் செயல்படும் போதெல்லாம் உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு நிவாரணம் பெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10-க்கும் அதிகமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். எனவே அவருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களில், ``ஆளுநருக்கு என்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அவர் அமைச்சரவை குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுக்கு உட்பட்டவர். ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்கள் நடைபெற்ற போது, அம்பேத்கர் தெளிவாக கூறியிருக்கிறார். அமைச்சரவையின் குழுவின் முடிவுகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றால், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று அர்த்தம். ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது!

ஆனால், இது எதையும் தமிழ்நாடு ஆளுநர் கருத்தில் கொள்வதே கிடையாது. நாங்கள் அனுப்பி வைத்த மசோதாவில் மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறி எங்களுக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். அதே மசோதாக்களை நாங்கள் மீண்டும் ஆளுநருக்கு கொடுத்தால், ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். அவர் அப்படி செய்வதற்கான எந்த அதிகாரமும் அவருக்கு கிடையாது எனவே தமிழ்நாடு ஆளுநர் செய்திருப்பது அப்பட்டமான அதிகார வரம்பு மீறல்" என வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது

ஆளுநர் ரவி

ஆளுநர் தரப்பு வாதங்கள்

தமிழ்நாடு ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி , ''ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படி, ஒரு மசோதாவை எந்த ஒரு நிலையிலும் அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பிவிட்டால், அந்த மசோதா மீதான ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் முடிவுக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு மசோதா மீது முடிவெடுப்பது குடியரசு தலைவர்தான்.

மசோதாவை நிராகரித்தால் அதற்கான காரணத்தை ஆளுநர் தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு அரசு சொல்கிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமிப்பது தொடர்பான மசோதாவில், ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை அகற்றும் வகையில் அதன் அம்சங்கள் இருந்தது. அதனால்தான் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 8.4.2025 (இன்று) இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிக விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம்

தீர்ப்பை வாசிக்க தொடங்கியவுடன் 'இந்த விவகாரத்தில் சில முக்கியமான கேள்விகள் எழுந்திருக்கிறது. அதற்கு நாங்கள் பதில் காணவிருக்கிறோம்' என தெரிவித்து விட்டு கேள்விகளை வாசித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்

*அரசியல் சாசனம் பிரிவு 200 ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அதில் எந்த அளவிற்கு அவர் செயல்பட முடியும் ?

*இந்த அதிகாரத்தின் கீழ் அவர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியுமா?

*இந்த அதிகாரம் என்பது வரம்புகள் இல்லாத வீட்டோ பவரா அல்லது வரம்புக்கு உட்பட்டதா?

*சட்டப்பேரவை முதல் முதலாக ஒரு மசோதாவை அனுப்பி வைக்கும் போது, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக அதே மசோதாவை அனுப்பும்போது குடியரசு தலைவருக்கு ஆளுநரால் அனுப்ப முடியுமா?

*தமிழ்நாடு சட்டப்பேரவை பத்து மசோதாக்களை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைத்த போது, அதை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டப்படி செல்லத்தக்கதா?

*அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்த கால வரம்பு நிர்ணயிக்க முடியுமா? அதில் குறிப்பிடப்பட்டுள்ள `As soon as possible' என்ற வார்த்தையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

ஆளுநர் ரவி

*மாநில ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவை குழுவின் அறிவுரையின் படி மட்டுமே செயல்பட வேண்டுமா? அல்லது அவருக்கு என்று தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கிறதா? அவ்வாறு தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்றால் அதில் நீதித்துறை எந்த அளவிற்கு தலையிட முடியும்?

என பல முக்கிய கேள்விகளை எழுப்பினார்கள்.

கேள்விகளுக்கு பதில்

கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்,

ஆளுநருக்கு அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் இருக்கிறது.

1. முதலாவது மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது.

2. இரண்டாவது மசோதாவை நிறுத்தி வைப்பது.

3. மூன்றாவது அதை குடியரசு தலைவருக்கு அனுப்புவது.

அரசியல் சாசனம் பிரிவு 200-ன் படி ஆளுநர் முழுமையாக தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கொண்டவர் கிடையாது. 'ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பேன்' என ஆளுநர் முடிவெடுப்பாரேயானால் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 'as soon as possible' என்ற விதிமுறையின் கீழ் அவர் கட்டாயம் செயல்பட்டாக வேண்டும்.

வெறுமனே உட்கார்ந்திருக்க முடியாது...

இதில் `வீட்டோ' பவர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அவரிடம் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படுகிறது என்றால், அரசியல் சாசனப் பிரிவு 200-ன் கீழ் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படையில் மட்டும்தான் அவர் செயல்பட முடியும். ஒரு மசோதா ஆளுநரிடம் கொடுக்கப்படுகிறது என்றால், அதன் மீது அவர் செயல்பட வேண்டும். அதை விடுத்து வெறுமனே அந்த மசோதா மீது அவரால் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

உச்ச நீதிமன்றம்

பொது விதிப்படி ஒரு மசோதாவை அரசிடம் திருப்பி அனுப்பி விட்டு அரசு அதை ஆளுநருக்கே மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்பும் பட்சத்தில், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதில் ஒரே ஒரு விதிமுறை தளர்வு என்னவென்றால், இரண்டாவது முறையாக மாநில அரசு அனுப்பும் மசோதா, முதல் முறை அனுப்பிய மசோதாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால் மட்டும்தான் அதை குடியரசு தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரால் பரிசீலனை செய்ய முடியும்.

எனவே, மேற்சொன்ன கேள்விகள் மற்றும் அதற்கு கண்ட பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது சட்டவிரோதம் மற்றும் அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டியது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு ஆளுநர் நேர்மையாக செயல்படவில்லை" எனக் குறிப்பிட்டனர்.

கால வரம்பு..!

இதனை அடுத்து மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால வரம்பையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிர்ணயித்தனர். அதன்படி மசோதாக்களை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ முடிவு செய்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக, மசோதாவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ முடிவு எடுத்தால், அதனை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

ஸ்டாலின் - ஆளுநர் ரவி

பொது விதிகள் படி, ஒரு மாநில ஆளுநர் அந்த மாநில அரசின் அமைச்சரவை குழுவின் அறிவுரையின்படி செயல்பட கடமைப்பட்டவர். மாநில ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அரசியல் சாசனத்தை செயல்படுத்துவது என்ற இடத்தில் அவரது அத்தனை அதிகாரங்களும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும். அரசியல் சாசனத்தின் மாண்புகளை காப்பாற்ற ஆளுநர் இவ்வாறு தான் செயல்பட முடியும்.

ஆளுநரின் விதிமீறல்...

எனவே பத்து மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் எடுத்த நடவடிக்கை விதிமுறை மீறல் மட்டுமல்லாமல், பிழையானதும் கூட. இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஒரு மாநில ஆளுநர் என்பவர் விழிப்புடன் இருக்க வேண்டுமே தவிர, தடையை ஏற்படுத்துபவராக இருக்கக் கூடாது." என தெரிவித்த நீதிபதிகள், கடைசியாக அம்பேத்கரின் மிக முக்கிய வாக்கியமான `ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்" என்பதை சுட்டிக்காட்டி தங்களது தீர்ப்பை நிறைவு செய்தனர்.

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' - இஸ்ரோ தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்... மேலும் பார்க்க

`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது. அரசியலம... மேலும் பார்க்க