இடுக்கியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி
இடுக்கி: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லரிங்காடு, வன விளிம்பு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் இலாஹி(22). இவர் மேய்ச்சல் பகுதியில் இருந்து தனது பசுவை பிடித்து வந்துள்ளார். அப்போது வனத்தில் இருந்து திடீரென வந்த யானை இலாஹியை தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
யானையிடம் இருந்து சிறு காயங்களுடன் தப்பிய மன்சூர் இதுகுறித்து, அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க |‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலம் வாக்காளா்களை நீக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள் காயமடைந்த இலாஹியை மீட்டு தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இலாஹியின் உறவினா்கள், பொதுமக்கள் தொடுபுழாவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் அண்மைக் காலமாக வனவிலங்குகள், குறிப்பாக யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதை காணமுடிகிறது என போலீஸார் தெரிவித்தனர்.