``தாராவியில் வீடு பெற தகுதியில்லாத 1 லட்சம் மக்களுக்கு...” - ஏக்நாத் ஷிண்டே சொல்...
”பேராவூரணி பேரூராட்சியில் ஊழல், வழக்கு தொடர்ந்த திமுக ஒப்பந்தராரர்”- ஆர்.காமராஜ்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வேதாந்தம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, எஸ்.வி.திருஞானசம்பந்தம், அமைப்பு செயலாளர் `கல்யாண ஓடை' செந்தில் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஊழல் குறித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆர்.காமராஜ் பேசுகையில், "பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, அதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் நீதிமன்றம் ஆறு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவர் சேகர் திமுக நகரச் செயலாளர், மாமனார் செல்வராஜ் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர், இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள். உள்ளாட்சிப் பணியில் இருப்பவர்களின உறவினர்கள் ஒப்பந்தப் பணிகளை செய்யக்கூடாது என்ற விதிமுறை, இருந்தும் அதை மீறி பல ஒப்பந்த பணிகளைச் செய்துள்ளனர். பணிகளை முடிக்காமலே பணத்தை எடுத்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். நீதிமன்றத்தை மதிக்காத திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அதிமுக சார்பில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம்" என்றார்