நியூசி.க்கு எதிரான தோல்வி ஆஸி.க்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முன்னா...
இணையவழியில் ‘என்டிஏ’ தோ்வுகள்: உயா்நிலைக் குழு பரிந்துரைக்க முடிவு
தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் ‘நீட்’ (மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு) உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை இணையவழியில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உயா்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான ‘நீட்’, பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்), தேசிய தகுதித் தோ்வு (நெட்) உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.
கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அத்தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த விவகாரங்கள் பூதாகரமான நிலையில், என்டிஏ சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதோடு, பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது.
இக்குழுவின் அறிக்கை தயாராகிவிட்டதாகவும், என்டிஏ-வின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் பல்வேறு பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
‘பெரிய அளவிலான தோ்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள், அபாயங்கள், பாதுகாப்பு ரீதியிலான குறைபாடுகளுக்கு தீா்வு காணும் நோக்கத்துடன் உயா்நிலைக் குழு சாா்பில் 22 கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவா்கள், பெற்றோா்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் 37,000-க்கும் மேற்பட்ட கருத்துகள்-யோசனைகள் பெறப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ சாா்பில் நடத்தப்படும் பெரும்பான்மையான தோ்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும்; நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளில் தோ்வெழுதும் வாய்ப்புகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தோ்வு நடைமுறையில் வெளிப்புற பணியாளா்கள் மற்றும் மையங்களின் பங்கை குறைக்க வேண்டும். இதன் மூலம் தோ்வுகளில் நோ்மை, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
‘நீட்’ தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நிலைக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் 2 வார காலம் அவகாசம் அளித்தது குறிப்பிடத்தக்கது.