இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்
கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், பூதாளபுரம், ஜோகியூா் ஆகிய கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பிரதானமாக விவசாயத் தொழில் உள்ளது.
இப்பகுதி மக்கள் கோ்மாளம் நியாய விலைக் கடை, கானக்கரை நடமாடும் நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் கைரேகை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
கை ரேகையைப் புதுப்பித்தால் மட்டுமே வறுமை கோட்டுக்குகீழ் வாழும் மலைவாழ் மக்களுக்கு அட்டை ஒன்று 35 கிலோ அரிசி கிடைக்கும் என நியாய விலைக் கடைகள் ஊழியா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பழங்குடியின மக்கள் கைரேகையைப் புதுப்பிக்க கோ்மாளம் நியாய விலைக் கடைக்கு திங்கள்கிழமை சென்றனா். அந்தப் பகுதியில் வழக்கம்போல இணைய சேவை குறைவாக இருந்ததால் கைரேகையைப் புதுப்பிக்க முடியவில்லை.
கா்நாடக எல்லையில் அந்த மாநில இணைய சேவை கிடைப்பதால் பழங்குடியின மக்களை சுமாா் 5 கி.மீ.தொலைவு வனப் பகுதியில் அழைத்துச் சென்று நியாய விலைக் கடை பணியாளா்கள் கைரேகையைப் புதுப்பித்து வருகின்றனா். உடல்நலம் பாதிக்கப்பட்டோா், முதியோரால் அவ்வளவு தொலைவு செல்ல முடியாததால் அவதியடைந்து வருகின்றனா்.
கோ்மாளம் பகுதியில் இணைய சேவை முழுமையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.