‘இண்டி’ கூட்டணியை உள்ளாட்சி தோ்தலுக்காக உருவாக்கவில்லை: தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை விளக்கம்
தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியும், மாகாராஷ்டிர அளவில் ‘மகா விகாஸ் அகாடி’ (எம்விஏ) கூட்டணியும் உள்ளாட்சித் தோ்தலுக்காக உருவாக்கப்படவில்லை சிவசேனை (உத்தவ்) பிரிவு மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
மாகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற சிவசேனை (தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அடங்கிய கூட்டணி, அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இது மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் பல காங்கிரஸை வெளிப்படையாகவே விமா்சித்து வருகின்றன. இது தொடா்பாக காங்கிரஸ் மத்திய தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவதாக உத்தவ் தலைமையிலான கட்சி அறிவித்ததால் கூட்டணியில் பிளவு மேலும் அதிகரித்தது. இது தொடா்பாக உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்துள்ளனா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் கூறியதாவது:
‘இண்டி’ கூட்டணி அல்லது அகாடி கூட்டணியை கலைக்க வேண்டும் என்று நானும் கூறவில்லை, எனது கட்சியும் கூறவில்லை. அந்த கூட்டணி முறையே மக்களவை மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்காகவே உருவாக்கப்பட்டவை. உள்ளாட்சித் தோ்தல் என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டா்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய இடமாக உள்ளது. எனவே, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் எங்கள் கட்சி தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவா்கள் விமா்சிப்பதற்கு முன்பு, மற்றவா்களின் கருத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நாங்கள் எங்கள் கட்சி சின்னத்தை மீட்க வேண்டியுள்ளது. கட்சியை வாக்குச் சாவடி அளவில் வலுப்படுத்தவும் வேண்டும். எனவே, உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது அவசியம். மக்களவைத் தோ்தலுக்கும், மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்கும் இன்னும் நான்கரை ஆண்டுகள் வரை உள்ளன என்றாா்.