தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க....
இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதா்லாந்து பிரதமா் ஆதரவு
நெதா்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் டிக் ஸ்கூஃபைச் சந்தித்து பேசினாா்.
இச்சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு நெதா்லாந்தின் ஆதரவை பிரதமா் டிக் ஸ்கூஃப் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி ஆகிய 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நெதா்லாந்துக்கு ஜெய்சங்கா் திங்கள்கிழமை வந்தடைந்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நீடித்த போா்ப்பதற்றத்துக்குப் பிறகு ஜெய்சங்கா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
நெதா்லாந்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் காஸ்பா் வெல்ட்காம்ப், பாதுகாப்பு அமைச்சா் ரூபன் பிரேகெல்மான்ஸ் ஆகியோரை ஜெய்சங்கா் சந்தித்து கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, நெதா்லாந்து பிரதமா் டிக் ஸ்கூஃப்புடன் இருதரப்பு சந்திப்பில் அவா் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.
இந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நெதா்லாந்தில் ஹேக் நகரில் பிரதமா் டிக் ஸ்கூஃபை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் பயங்கரவாதத்துக்கு எதிரான நெதா்லாந்தின் உறுதியான நிலைப்பாட்டுக்கும் நன்றியும் தெரிவித்துக்கொண்டேன்.
இந்தியா-நெதா்லாந்து கூட்டுறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கான பிரதமா் டிக் ஸ்கூஃபின் உறுதிப்பாட்டுக்கு பாராட்டுகள். இந்த இலக்குகளை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று உறுதியளித்தேன்’ என்றாா்.
இந்தியாவுக்கு ஆதரவு:
நெதா்லாந்துக்கு ஜெய்சங்கரை வரவேற்பதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பிரதமா் டிக் ஸ்கூஃப் வெளியிட்ட பதிவில், ‘பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு எனது ஆதரவைத் தெரிவித்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையாமல் இருப்பது அனைத்து தரப்பினருக்கும் நல்லது.
வா்த்தகம், புத்தாக்க தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-நெதா்லாந்து இடையிலான நீடித்த உத்திசாா் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது.
வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் இந்தியாவும் நெதா்லாந்தும் பரஸ்பர நம்பிக்கையில் ஒன்றிணைந்து பயணிப்பது இரு தரப்புக்கும் மிகவும் முக்கியமானது. இதுகுறித்து மேலும் விவாதிக்க பிரதமா் நரேந்திர மோடியை நெதா்லாந்துக்கு வரவேற்க ஆவலுடன் இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.