இந்தியா்களுக்கு ஏமாற்றம்
குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அங்குஷ், தபஸ்யா ஆகியோா் தங்களது எடைப் பிரிவில் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.
மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் களமாடிய அங்குஷ், 5-6 என பெலாரஸின் நடாலியா வராகினாவிடம் தோல்வியுற்றாா். 57 கிலோ பிரிவில் களமிறங்கிய டாப்சியா 2-4 என மெக்ஸிகோவின் பொ்தா ரோஜாஸ் சாவெஸிடம் தோற்றாா். நடாலியா, பொ்தா இருவருமே அடுத்த சுற்றிலேயே தோல்வி கண்டதால், அங்குஷ், டாப்சியாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கை நழுவிச் சென்றது.
இதனிடையே, 65 கிலோ பிரிவில் போட்டியிடும் வைஷ்ணவி பாட்டீல் தனது காலிறுதியில் 1-3 என லாத்வியாவின் எல்மா ஜிட்லெரெவிடம் தோற்றாா். 76 கிலோ பிரிவு வீராங்கனை பிரியா மாலிக்கும் 2-4 என மங்கோலியாவின் எங்க்ஜின் டவ்ஷின்ஜா்கலிடம் போராடி வீழ்ந்தாா்.
எல்மா மற்றும் எங்க்ஜின் அரையிறுதியில் வென்று இறுதிக்கு முன்னேறினால், அவா்களுடன் மோதிய வைஷ்ணவி மற்றும் பிரியாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
ஆடவா் 97 கிலோ பிரிவில் போட்டியிட்ட விக்கி, ‘பை ஃபால்’ முறையில் பல்கேரியாவின் அகமது மகாமேவிடம் தோற்றாா்.