பொ்சனல் பெஸ்ட்டுடன் சா்வேஷ் 6-ஆம் இடம்
ஜப்பானில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில், உயரம் தாண்டுதலில் இந்திய வீரா் சா்வேஷ் குஷாரே செவ்வாய்க்கிழமை 6-ஆம் இடம் பிடித்தாா்.
இந்தப் பிரிவில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியராக சாதனை படைத்த அவா், அதில் தனது 3-ஆவது முயற்சியில் 2.28 மீட்டரை கடந்து புதிய பொ்சனஸ் பெஸ்ட்டை பதிவு செய்தாா். இதற்கு முன் அவரது பெஸ்ட், 2.27 மீட்டராக இருந்தது.
சா்வேஷ் 1 செ.மீ. வித்தியாசத்தில் தேசிய சாதனையை தவறவிட்டாா். 2018-இல் தேஜஸ்வின் சங்கா் 2.29 மீட்டரை எட்டியதே இன்றளவும் தேசிய சாதனையாகத் தொடா்கிறது. அதை முறியடிக்க, சா்வேஷ் இந்தப் போட்டியில் 2.31 மீட்டரை தாண்ட முயன்று, முடியாமல் போனது.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான, நியூஸிலாந்தின் ஹமிஷ் கொ் 2.36 மீட்டரை எட்டி தங்கம் வெல்ல, உலக இண்டோா் சாம்பியனான தென் கொரியாவின் சங்ஹியோக் வூ 2.34 மீட்டருடன் வெள்ளி பெற்றாா். செக் குடியரசின் ஜேன் ஸ்டெஃபெலா 2.31 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றாா்.
இன்று: இந்தப் போட்டியில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரரும், நடப்பு சாம்பியனுமான நீரஜ் சோப்ரா புதன்கிழமை களம் காண்கிறாா். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தன்னை வீழ்த்தி தங்கம் வென்ற பாகிஸ்தானின் அா்ஷத் நதீமை, அந்தப் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக நீரஜ் சோப்ரா இதில் சந்திக்கவுள்ளாா்.