இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி...
இந்தியா மீதான வரி விதிப்பு மோதலை ஏற்படுத்துகிறது! - டிரம்ப்
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு இரு நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போரை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததுடன் இந்தியா மீது அதிகபட்ச(50%) வரியை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி பற்றி டிரம்ப்பும் அதிபர் டிரம்ப் பற்றி மோடியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான முதற்கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நவம்பர் இறுதியில் முடிவுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீதான வரி விதிப்பு பற்றி பேசுகையில்,
"இந்தியா, ரஷியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தேன். இது இந்தியாவுடனான நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. இது நம்முடைய பிரச்னை என்பதைவிட ஐரோப்பாவின் பிரச்னை என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
வங்கிகளுக்கு எதிரான தடைகள், வரி விதிப்பினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. நான் ஏற்கனவே நிறைய அதைச் செய்துவிட்டேன்.
நான் இந்தியா - பாகிஸ்தான் உள்பட இதுவரை 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன். சில தீர்க்க முடியாத போர்களை நிறுத்திய என்னால் ரஷியா - உக்ரைன் போரை தீர்க்க முடியவில்லை.
பல நாடுகளின் வரி விதிப்புகளின் மூலமாக நாங்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறோம் (போரை நிறுத்தியிருக்கிறோம்). எங்களைப் பயன்படுத்திக் கொண்ட பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வரி விதிப்பு எங்களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது. அதுமட்டுமன்றி நாட்டிற்கு கோடிக்கணக்கான வருவாயை கொண்டுவந்தது. வரி விதிப்பு தொடர்பாக எங்கள் மீதான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது எங்களை ஒரு பணக்கார நாடாக மாற்றியுள்ளது" என்று பேசியுள்ளார்.