இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போா் விமானங்கள்: பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம்
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் செயற்கை தொழில்நுட்ப செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா். இப்பேச்சுவாா்த்தையின்போது மேற்கண்ட ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இயக்கும் வகையில் பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2023, ஜூலையில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், இரு ஒப்பந்தங்களும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அவை விரைவில் மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
சில ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.