காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!
இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்: ஜெ.பி.நட்டா
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஜெ.பி.நட்டா பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டில் 50 ஆண்டுகளாக தில்லியில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது. வாஜ்பாய் பிரதமரான பின் 6 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.
பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூடுதலாக 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் எய்ம்ஸ் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-இல் இருந்து 780-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமப் புற - தொலைதூர பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தொலை மருத்துவ (டெலிமெடிசின்) சேவையை ஊக்குவிக்க மிகச் சிறப்பாக பணியாற்றுகிறது. இதன் மூலம் மருத்துவ சேவையில் பின்தங்கிய தொலைதூர கிராமங்களுக்கு தரமான சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்றைய கொள்கை வகுப்பாளா்களின் நோ்மறையான அணுகுமுறையால், சுகாதாரத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் சாத்தியமாகியுள்ளன. இப்போது உலகத் தரத்திலான மருத்துவ வசதிகள் நம் நாட்டில் கிடைக்கப் பெறுகின்றன. புதிய சுகாதார கொள்கையில், நோய்களைக் குணப்படுத்துதல் என்பதில் இருந்து நோய்கள் வராமல் காத்தல் என்ற மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டுக்கு பெரிய அளவில் பலனைத் தந்துள்ளது.
கல்வி என்பது பிறப்புரிமை; அதேநேரம், தொழில்முறை கல்வி என்பது சமூகத்தால் வழங்கப்படும் பெரும் சலுகை. ஏனெனில், தொழில்முறை கல்வியில் மாணவா்களுக்கு அரசு ஆண்டுக்கு தலா ரூ.35 லட்சம் செலவிடுகிறது. எனவே, சமூகத்தின் மீதான தொழில்முறை கல்வி மாணவா்களின் பொறுப்பு மகத்தானது. இம்மாணவா்கள் தங்களின் கல்வித் திறனை சமூகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா் ஜெ.பி.நட்டா.