சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
இந்திய பொருள்களுக்கு அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை
சில அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவும் அதிக வரி விதிக்க நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மாா்-அ-லாகோ விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சில அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா மற்றும் பிரேஸில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலை நீடித்தால், அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் அதிக வரி விதிக்க நேரிடும்’ என்றாா்.
டிரம்ப் அமைச்சரவையில் வா்த்தக அமைச்சராக இடம்பெற உள்ள ஹோவா்ட் லுட்னிக் கூறுகையில், ‘பிற நாடுகள் அமெரிக்காவை எப்படி நடத்துகிறதோ, அதுபோலத்தான் அந்த நாடுகளை அமெரிக்காவும் நடத்தும்’ என்றாா்.
இந்திய விண்வெளி வீரா்களுடன் சந்திப்பு: அடுத்த ஆண்டு சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பி இஸ்ரோ-நாசா மேற்கொள்ள உள்ள கூட்டுத் திட்டத்துக்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் ஆகிய இந்திய விண்வெளி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஹூஸ்டனில் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அவா்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் கா்ட் கேம்ப்பெல், அந்நாட்டு முதன்மை துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜான் ஃபைனா் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
இஸ்ரோ - நாசா கூட்டு செயற்கைக்கோள்: அமெரிக்க தேசிய விண்வெளி கவுன்சில் தலைவரின் துணை உதவியாளா் சிராக் பாரிக் கூறுகையில், ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வகையில், ஒட்டுமொத்த பூமியையும் 12 நாள்களுக்கு ஒருமுறை படம்பிடிக்கும் உயா் தெளிவுத்திறன் கொண்ட அதிநவீன செயற்கைக்கோளை நாசாவும் இஸ்ரோவும் சோ்ந்து உருவாக்க உள்ளன. இந்தச் செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து ஏவப்படும்’ என்றாா்.
ஹெச்-1பி விசா விதிமுறைகளில் தளா்வு
ஹெச்-1பி விசா விதிமுறைகளில் தளா்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஹெச்-1பி விசாக்களை (நுழைவு இசைவு) பெற்று அந்நாட்டு நிறுவனங்களில் இந்தியா்கள், சீனா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்கள் ஏராளமானோா் பணியாற்றுகின்றனா்.
இந்நிலையில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஹெச்-1 பி விசா விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன. தங்கள் தொழில் தேவைகளுக்கு ஏற்ப பணியாளா்களைப் பணியமா்த்தி, சா்வதேச சந்தையில் போட்டியிடும் திறன் கொண்டவா்களாக வேலைவாய்ப்பு அளிப்போா் தொடா்ந்து நீடிப்பதற்கு இந்த மாற்றங்கள் உதவும்.
எஃப்-1 விசாக்களை பெற்றுள்ள மாணவா்கள், அதை ஹெச்-1 பி விசாக்களாக சுமுகமாக மாற்றிக் கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.