”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ் (24) என நான்கு பிள்ளைகள்.
கடந்த 8 ஆம் தேதி நடுக்காவேரி போலீஸார் தினேஷ் வீட்டுக்கு வந்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து சகோதரிகள் மூவரும் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பி.டெக் பட்டதாரியான கீர்த்திகா, "எங்க அக்கா மேனகாவுக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருக்குது. இந்த நேரத்துல என் தம்பி சிறையில் இருந்தானா அக்கா திருமணம் நின்னுடும்.
என் தம்பி எந்த தப்பும் செய்யலை. அவனைக் கைது பண்ணி உள்ளே வச்சிருக்கீங்க வெளியே விடுங்க" என்று இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது சர்மிளா அவர்களைச் சாதி ரீதியிலாகப் பேசியுள்ளார். "பொய் வழக்கு போட்டு தம்பியைக் கைது செய்தததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தம்பியை விட்டால்தான் நாங்க போவோம் இல்லன்னா விஷம் குடிச்சுட்டு ஸ்டேஷனிலேயே செத்துப் போறோம்" என்றுள்ளார்.
அப்போது சர்மிளா மனம் இறங்காமல் அலட்சியபடுத்தியதுடன் சாதி குறித்து பேசியிருக்கிறார். இதனால் மனம் உடைந்த சகோதரிகள் மேனகா, கீர்த்திகா இருவரும் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்துள்ளனர்.
இதனைத் தடுக்க வேண்டிய சர்மிளா உள்ளிட்ட போலீஸார் வேடிக்கை பார்த்ததுடன், "நாடகமாடுறீங்களா" என்று கேட்டு ஏளனம் பேசியுள்ளனர்.
கிட்டதட்ட முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு ஸ்டேஷனில் இருந்து மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்து சென்றனர்.
இதில் கீர்த்திகா கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். மேனகாவுக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கீர்த்திகா மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா உள்ளிட்ட போலீஸார் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உடற்கூறாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பின்னர், சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஆர்.டீ.ஓ விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப் இன்ஸ்பெக்டர் அறிவழகன், தலைமைக் காவலர் மணிமேகலை ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த 11ம் தேதி கீர்த்திகா உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
"சர்மிளா உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செஞ்சா மட்டுமே உடலை வாங்கி கொள்வோம்" என உறவினர்கள் கூறிவிட்டதால், கடந்த ஏழு நாட்களாக மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடுக்காவேரியில் தொடர்ந்து காத்திருப்போர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது.
இந்த நிலையில், நடுக்காவேரி எஸ்.ஐ அறிவழகன் வல்லம் காவல் நிலையத்துக்கும், மற்றொரு எஸ்.ஐ கலியபெருமாள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்கும், தலைமை காவலர் மணிமேகலை திருவோணம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன், இன்று நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர்.
பிறகு, இறந்த கீர்த்திகாவின் வீட்டிற்குச் சென்று, தந்தை அய்யாவு மற்றும் பெரியம்மா சுசிலா ஆகியோரிடம் விசாரணை நடத்தியதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கீர்த்திகாவின் சகோதரி மேனகாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மேனகா, "எனக்கு என் தங்கச்சி, தம்பிதான் உலகம். ஒன்பதாவது வரை படிச்ச நான் கூலி வேலைக்குப் போய் இருவரையும் படிக்க வச்சேன். குடும்பம் நல்லா வரணும்னு எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டோம்.

போலீஸ் பொய் வழக்கு போட்டதை எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டதுக்கு எங்களைச் சாதியைச் சொல்லி திட்டினார். தம்பியைச் சிறையில் அடைத்து எங்களை அடித்து துரத்தினார்.
கதறி கெஞ்சி கேட்டும் அங்கிருந்த போலீஸார் மனம் இறங்கவில்லை. இந்த கொடுமையைத் தாங்க முடியாம முதல்ல கீர்த்திகா விஷம் குடிச்சா. பின்னர் நான் பிடிங்கி குடித்து விட்டேன்.
அப்ப கூட அனைத்து போலீஸாரும் நாடகம் ஆடுறதா ஏளனம் செஞ்சாங்க. நாங்க இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா சார். இன்னும் என் தங்கச்சி கீர்த்திகாவை என் கண்ணுல காட்டல காட்ட சொல்லுங்க, எங்களுக்கு நீதி வேண்டும் சார்" என்று கலங்கினார்.
விசாரணையின் போது, எஸ்.பி., ராஜாராம், தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., இலக்கியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ உள்ளிட்டவை] தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மேனகா தரப்பு காட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.