இனி பார்க்கிங் வசதியும் இருந்தால்தான் கார் வாங்க முடியும்; சென்னையில் வரப்போகுது புது சட்டம்
கடந்த மார்ச் 13 அன்று சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புதிய பார்க்கிங் திட்டத்தில் இனி சென்னையில் கார் வாங்குபவர்கள் ஆவணங்களுடன் தங்களிடம் காரை பார்க் செய்யும் இடவசதியும் இருக்கிறது என்பதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
நாளுக்கு நாள் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அதை பார்க் செய்யும் இடவசதி குறைந்து வருகிறது. பொருளாதார வசதி உள்ளவர்கள் தங்கள் வசதிக்கென மட்டுமில்லாமல் தங்களின் அந்தஸ்த்தைக் காட்டவும் கார் வாங்குகிறார்கள். சிலர் ஆசைக்குக் கார் வாங்கிவிட்டு, பார்க்கிங் செய்ய இடமில்லாமல் சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது. 2022 கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 92 லட்சம் கார்கள் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. இப்போது கண்டிப்பாக எண்ணிக்கை உயர்ந்திருக்கும். ஆனால், இந்த கார்களுக்கு பார்க்கிங் வசதிதான் இல்லை. இன்றும் சென்னையில் பல கார்கள் சாலையோரங்களில்தான் நிறுத்தப்படுகின்றன. அதாவது சுமார் 30 லட்சம் கார்களுக்கு பார்க்கிங் வசதியே இல்லை.
இதைத் தவிர்க்கத்தான் இப்படி ஓர் அதிரடி பரிந்துரையைச் செய்துள்ளது சென்னைப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம்.
இனி கார் வாங்குபவர்கள் தங்களிடம் பார்க்கிங் வசதி உள்ளது என்பதை உறுதி செய்யவேண்டும் என்று சென்னைப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்து சென்னைப் போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‛சிலரிடம் ஒரு காரை பார்க் செய்வதற்கான வசதி மட்டுமே இருக்கும். ஆனால் அவர்கள் மூன்று கார் வைத்திருப்பர்கள். ஒரு கார் பார்க்கிங்கில் இருக்கும் மீதம் இரண்டு கார் வீதியில் இருக்கும். இது போக்குவரத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் பெரும் இடையூறு. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படும்!’’ என்கிறார்.
இனி கார் வாங்கும்போது பார்க்கிங் ஸ்பேஸுக்கான டாக்குமென்ட்டையும் சமர்ப்பிக்கணும் மக்களே!