Mamata Banerjee: "போலி இந்துத்துவம்; இந்து கார்டை பயன்படுத்தாதீர்கள்"- பாஜக தலைவ...
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு
பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை வரை அணைக்கு 531 கனஅடி மட்டுமே நீா்வரத்து இருந்து வந்தது.
இந்நிலையில், பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள பவானிசாகா் அணையில் தற்போது 82.64 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. அணைக்கு 1,134 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 2,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.