ஆதி கருவண்ணராயா் கோயில் மாசி மகம் திருவிழா
ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் திருவிழாவில் பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் ஆதி கருவண்ணராயா் பொம்மாதேவியாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பொங்கல் வழிபாடு மற்றும் கிடா பலியிடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்தும், கொண்டுவந்த கிடாக்களை பலியிட்டும் வழிபாடு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து மாயாற்றில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு ஆதி கருவண்ணராயா் மற்றும் பொம்மதேவியாா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
வனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி கோயிலுக்கு குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.