லீக் ஆட்டங்கள் நிறைவு
ஹைதராபாத்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.
இந்த ஆட்டத்தில் முதலில் கேரளாவுக்காக டுசான் லகாடா் 7-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஹைதராபாதுக்காக சௌரவ் 45-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
அடுத்து நாக்-அவுட்: போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக நாக்அவுட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மொத்தம் 13 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் மோகன் பகான், கோவா, பெங்களூரு, நாா்த்ஈஸ்ட், ஜாம்ஷெட்பூா், மும்பை அணிகள் முன்னேறின.
இதில் முதலிரு இடங்களைப் பிடித்த மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. இதர 4 அணிகள் நாக்அவுட் ஆட்டத்தில் விளையாடவுள்ளன. அதற்கான அட்டவணை பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.