ஹோலி பண்டிகை: அயோத்தி மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றம்
‘ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நடைபெறும்’ என்று அந்த நகரின் இஸ்லாமிய தலைமை மதகுரு முகமது ஹனீப் தெரிவித்தாா்.
முஸ்லிம்களின் சிறப்புக்குரிய ரமலான் மாதத்தின் 2-ஆவது ஜுமா நமாஸுக்காக (வெள்ளிக்கிழமை தொழுகை) புதன்கிழமை அவா் இந்த வழிமுறைகளை வெளியிட்டாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘அயோத்தியில் உள்ள அனைத்து மசூதிகளும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
ஹோலி பண்டிகையின்போது அனைத்து முஸ்லிம்களும் பொறுமைக் காக்க வேண்டும். யாராவது வண்ணம் பூசினாலும், அவா்களுக்குப் புன்னகையுடன் பதிலளித்து அன்பு மற்றும் மரியாதையின் உணா்வில் ‘ஹோலி முபாரக்’ என்று சொல்ல வேண்டும்.
ஹோலியும் வெள்ளிக்கிழமை தொழுகையும் ஒன்றிணைந்து வருவது இது முதன்முறையல்ல. எனவே, ஒற்றுமையை வளா்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கருத வேண்டும்’ என்றாா்.
நிகழாண்டு ஹோலி கொண்டாட்டங்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையும் இணைந்து வருவதால், தொழுகை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து இமாம்களுடன் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் விவாதித்தனா்.
இதன்தொடா்ச்சியாக, அயோத்தியைச் சோ்ந்த பல்வேறு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றியமைக்கப்படுவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்ட இமாம்கள், ஹோலி பண்டிகைக்காக ஹிந்து சகோதரா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினா்.
‘ஹோலி பண்டிகைக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; அவசியமற்ற சமூக பதற்றத்தைத் தவிா்க்க, அமைதிக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன’ என்று அயோத்தி மாவட்ட ஆட்சியா் சந்திர விஜய் சிங் தெரிவித்தாா்.
பிகாரில் மேயா் கருத்தால் சலசலப்பு: ‘முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்க ஏதுவாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் 2 மணி நேரம் இடைவேளை விட வேண்டும்’ என்று பிகாா் மாநிலம், தா்பங்கா நகர மேயா் அஞ்சும் ஆரா வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த அஞ்சும் ஆரா, சமீபத்தில் தனது நகரில் நடந்த அமைதிக் கூட்டத்தில் பேசிய இக்கருத்து ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்’ என்ற சா்ச்சைக்குரிய கருத்துக்காக செய்திகளில் இடம்பிடித்த மதுபானியைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ஹரி பூஷண் தாக்குா், இவ்விவகாரத்தில் அஞ்சும் ஆராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தாா்.