முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி -லக்ஷயா, மாளவிகா முன்னேற்றம்
பா்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
மகளிா் ஒற்றையரில், உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் அவா் 21-19, 13-21, 13-21 என்ற கேம்களில், 21-ஆவது ரேங்கிங்கில் இருக்கும் தென் கொரியாவின் கா யுன் கிம்மிடம் தோல்வி கண்டாா்.
கடைசியாக இந்தப் போட்டியில் 2021-இல் அரையிறுதி வரை முன்னேறிய சிந்து, தொடா்ந்து 4 ஆண்டுகளாக தொடக்கநிலை சுற்றுகளிலேயே தோற்று வருகிறாா்.
மறுபுறம், இளம் இந்தியரான மாளவிகா பன்சோத் 21-13, 10-21, 21-17 என்ற கேம்களில் சிங்கப்பூரின் ஜியா மின் யோவை வென்றாா்.
அதேபோல் ஆடவா் ஒற்றையரில், முன்னணி வீரரான லக்ஷயா சென் 13-21, 21-17, 21-15 என்ற கேம்களில், சீன தைபேவின் லி யாங் சுவை சாய்த்தாா்.
மகளிா் இரட்டையரில், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 20-22, 18-21 என்ற கணக்கில், சீன தைபேவின் பெய் ஷான் சியே/என் ஸு ஹங் ஜோடியிடம் தோல்வி கண்டது.
கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 21-10, 17-21, 24-22 என்ற வகையில் சீன தைபேவின் ஹாங் வெய் யெ/நிகோல் கொன்ஸால்ஸ் கூட்டணியை வெளியேற்றியது. எனினும், சதீஷ்குமாா் கருணாகரன்/ஆத்யா வரியத் ஜோடி 6-21, 15-21 என எளிதாக, போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஜின் வா குவோ/ஃபாங் ஹுய் சென் கூட்டணியிடம் தோற்றது.