நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
இபிஎஃப்ஓ சேவைகளை மேம்படுத்த புதிய ஐடி மென்பொருள்: மே-ஜூனில் அறிமுகம்: மத்திய அமைச்சா் மாண்டவியா
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சேவைகளை மேம்படுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
9 கோடிக்கும் அதிகமான இபிஎஃப்ஓ பயனாளிகளுக்கு சேவையை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் முறையில் பெரும் மாற்றத்தை இபிஎஃப்ஓ மேற்கொள்ள உள்ளது. இதற்காக நிகழாண்டு மே அல்லது ஜூன் மாதங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் அறிமுகம் செய்யப்படும். இந்த நடவடிக்கை பயனாளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட, தடையற்ற சேவைகளை வழங்க மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏடிஎம்களில் இருந்து பணம்: புதிய மென்பொருள் வாயிலாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை வேகமாக கையாள்வதன் மூலம், ஏடிஎம்களில் இருந்தே பயனாளிகள் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான கோரிக்கைகள் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பங்களை பூா்த்தி செய்ய சிக்கலான மற்றும் நீண்ட நடைமுறைகள், நேரில் வருகை தருதல் ஆகியவற்றைப் புதிய மென்பொருள் ஒழிக்கும்.
இதன் மூலம் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு அளிக்கப்படுவதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைந்து பணம் வரவு வைக்கப்படும்.
தற்போது அரசு உத்தரவாதத்துடன் இபிஎஃப்ஓவிடம் மொத்தம் ரூ.27 லட்சம் கோடி உள்ளது. இந்த நிதிக்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.
ஓய்வூதிய முறையை மேம்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் அடல் ஓய்வூதிய திட்டம், பிரதமரின் ஜீவன் பீமா திட்டம், ஷ்ரமிக் ஜன் தன் திட்டம் உள்பட பல்வேறு சமூக நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இஎஸ்ஐசி பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தொழிலாளா்கள் மாநில காப்பீட்டு கழக (இஎஸ்ஐசி) பயனாளிகள் இலவச மருத்துவ சிகிச்சை பெறும் முறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வரையறைக்குள் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தோ்ந்தெடுக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளும் கொண்டுவரப்படும் என்றாா்.