பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்
கெட்அப்கள் மாற்றாமல் நடித்தாலும் கூட படத்திற்கு படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹீரோ சசிகுமார்.
சமீபத்திய 'அயோத்தி', 'நந்தன்' என பல படங்களை உதாரணாமாக கூற முடியும். அடுத்தடுத்து வெளிவரகூடிய கதைகளும் அதே கவனத்துடன் நடித்து வருகிறார்.
சிம்ரனுடன் சசிகுமார் நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை அடுத்து இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராசேந்திரன் , 'சலீம்' நிர்மல் குமார், பாலா அரண் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் ராஜூமுருகன், ''சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில் மிக முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்'' என்று மனம் திறந்திருக்கிறார்.
'டூரிஸ்ட் ஃபேமிலி'யை தொடர்நது ராஜுமுருகனின் 'மை லார்ட்' வெளிவருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகுமாரின் ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர். 'மை லார்ட்' படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.
இதனை அடுத்து பாலா அரண் இயக்கத்தில் பாலாஜி சக்திவேலுடன் இணைந்து நடித்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். இதனை தவிர, 'யாத்திசை' இயக்குநரின் படத்திலும் நடிக்கிறார். முதல் உலகப்போர் தொடர்பான கதை இது என்கிறார்கள்.

இது தவிர லியோமோலுடன் நடித்த 'ஃப்ரீடம்', சரத்குமாருடன் நடிதிருக்கும் 'நா நா', 'காவல் துறை உங்கள்' நண்பன் இயக்குநரான ஆர்.டி.எம். இயக்கத்தில் 'எவிடன்ஸ்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களுமே, படப்பிடிப்பு எப்போதோ, முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் இயக்குநர் சசியிடம் கதை ஒன்றை கேட்ட சசிகுமார், அப்படியே வியந்துவிட்டார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு பின் சசி மீண்டும் ஒரு அழுத்தமான, அழகியலான கதையோடு வருகிறார். சசி அண்ட் சசி இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூனில் தொடங்குகிறது. இது தவிர, விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனை வைத்து 'குற்றம்பரம்பரை' வெப்தொடரையும் இயக்கி நடிக்க உள்ளார் சசிகுமார்.