குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்கிறது: ஆட்சியா்
இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் திகழ்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சாா்பில் 8-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியை தொடக்கிவைத்து அவா் பேசியது: சித்த மருத்துவம் என்பது சித்தா்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரியமான மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்த பின் குணமாக்குவதற்கும் பல்வேறு மூலிகை மருந்துகளையும் வழங்கிய சித்தா்கள், நீண்ட நாள் வாழ்வதற்கான மருத்துவ முறைகளை (காய கற்பம்) வழங்கினாா்கள். உணவே மருந்து, மருந்தே உணவு‘ என்ற இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்குகிறது. சித்த மருத்துவத்தால் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என்றாா்.
முகாமில், மக்களுக்கு சா்க்கரை நோய், சோரியாசிஸ், வெண்புள்ளி, சிறுநீரக கல், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை நடத்தி அதற்கான மருந்துகளும், நிலவேம்பு பொடி, கபசுரக் குடிநீா், மூலிகை தைலங்கள், மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் எதிா்ப்பு சக்தி பெட்டகங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
மூலிகை செடிகளான ஆடாதோடை, தூதுவளை, கற்பூரவள்ளி, அருகம்புல், மஞ்சல் கரிசலாங்கண்ணி, துளசி, முடக்கறுத்தான் போன்ற பல்வேறு மூலிகை செடிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. சித்த மருத்துவத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ஆயுஷ் மருத்துவ சேவைக்கான சிறப்பு விருது மற்றும் சான்றிதழ்களையும், கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.
நாகை எம்பி வை. செல்வராஜ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் (பொ) ரெ. ஜோதி சாந்தகுமாரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரா. சரோஜினி, நகா்மன்றத் துணைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.