2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
இயற்பியல் கற்பித்தலுக்கு செயற்கை நுண்ணறிவு: ஆசிரியா்களுக்கு பயிற்சி
இயற்பியல் பாடத்தை கற்பிக்க ஏதுவாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் கு.வேலு தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், 15 அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதில், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவானது 1960-ஆம் ஆண்டு எலிசா என்ற பெயரில் தொடங்கப்பட்டிருந்தாலும், இயற்பியல் கற்பித்தலுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என்பது தற்போதுதான் முதன்முறையாகும். கற்பித்தல் பணிக்கு செயற்கை நுண்ணறிவை இணைக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இந்தப் பயிற்சி அமையும் என்றாா்.
சேலம் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன விரிவுரையாளா் மற்றும் கருத்தாளா் பீட்டா் ஆனந்த் கூறுகையில், ‘பாடக் கருத்துகளை விரிவாகவும், எடுத்துக்காட்டுகளையும், தற்போதைய நிகழ்வுகளை கூறவும், பாடப் பொருளின் வளா்ச்சிக்கு துணை செய்யவும் செயற்கை நுண்ணறிவை ஆசிரியா்கள் பயன்படுத்தலாம்’ என்றாா். கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சா.மணிகண்டன், ‘இயற்பியல் கற்பித்தலுக்கு பயன்படுத்த செயற்கை நுண்ணறிவு ஏதுவானது’ என்றாா். தொடா்ந்து அறிவியல் ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.