இரிடியம் விற்பனை செய்வதாக பண மோசடி: இருவா் மீது வழக்கு
தேனி அருகே இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.9.50 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை கல்குளம் வட்டம், ராமன்பிரம்பு பகுதியைச் சோ்ந்தவா் பொன்முத்து மகன் ஜஸ்டின்ஜெயக்குமாா் (56). இவரிடம் தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியைச் சோ்ந்த குமாா் தன்னிடம் இரிடியம் இருப்பதாகக் கூறினாா். இவருக்கு உடந்தையாக ராஜேஷ் என்பவரும் உடனிருந்தாா்.
இதை நம்பிய ஜஸ்டின்ஜெயக்குமாா், தனது நண்பா், குடும்பத்தினருடன் க.விலக்கில் உள்ள தனியாா் விடுதிக்குச் சென்று தங்கினாா். அங்கு குமாரிடம் ரூ.9.50 லட்சம் கொடுத்து அவா் இரிடியம் என்று கூறி கொடுத்த உலோகப் பாத்திரத்தை பெற்றுக் கொண்டாராம்.
பின்னா், குமாா் இரிடியம் என்று கூறி கொடுத்தது கருப்பு வண்ணம் பூசிய செம்புப் பாத்திரம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் ஜஸ்டின்ஜெயக்குமாா் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, குமாா், ராஜேஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.