இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: மே 16-இல் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா்.
இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று அறிவித்தாா்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா்ப் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதைத் தொடா்ந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி, ஜூலை 9 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதேவேளையில், அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்தது.
அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், அதற்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கு கடந்த மாா்ச்சில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றாா். இதன் தொடா்ச்சியாக மே 16-ஆம் தேதி அவா் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா். பின்னா், மே 17 முதல் 4 நாள்களுக்கு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அவருடன் மூத்த இந்திய அதிகாரிகள் குழுவும் செல்ல உள்ளது.
இந்தப் பயணத்தில் அமெரிக்க வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரை அமைச்சா் கோயல் சந்திக்க உள்ளாா்.
நிகழாண்டு செப்டம்பா்-டிசம்பா் மாத காலத்துக்குள் வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதி செய்வதற்கு முன்பாக, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய வகையில், இடைக்கால சரக்கு வா்த்தக ஏற்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், அமைச்சா் கோயல் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா்.