'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரப...
``இறங்க வேண்டும், குழந்தைய பிடிங்க..'' - ரயிலில் பயணியிடம் குழந்தையை விட்டுச்சென்ற பெண்
மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் பயணிகள் ரயிலில் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்து 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிர்வாகமும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி சென்ற புறநகர் ரயிலில் திவ்யா நாயுடு (19) என்ற பெண் தனது தோழி பூமிகாவுடன் பயணம் செய்தார். ரயில் பிற்பகல் 12 மணிக்கு சான்பாடா ரயில் நிலையத்தை நெருங்கிய போது அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க ஏதுவாக இரண்டு பேரும் வாசல் பக்கம் வந்தனர்.
அதே ரயிலில் மூன்று பேக் மற்றும் ஒரு குழந்தையுடன் பெண் ஒருவர் ரயிலில் இருந்து இறங்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்பெண் தனக்கு அருகில் நின்ற திவ்யாவிடம் ரயிலில் இருந்து இறங்கும்வரை குழந்தையை வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திவ்யாவும் குழந்தையை வைத்திருந்தார். திவ்யாவும், அவரது தோழியும் குழந்தையுடன் ஷீவுட் ரயில் நிலையத்தில் இறங்கினர். ஆனால், குழந்தையை அவர்களிடம் கொடுத்த பெண் ரயிலில் இருந்து இறங்காமல் அப்படியே ரயிலில் சென்றுவிட்டார்.
இதையடுத்து இரண்டு பெண்களும் அப்பெண் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் வருவார் என்று நினைத்து இறங்கிய இடத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அப்பெண் வரவே இல்லை. இதையடுத்து பூமிகா குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
அருகில் உள்ளவர்களின் ஆலோசனையின் பேரில் பூமிகா அக்குழந்தையை வசாய் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அக்குழந்தை பிறந்து 15 நாள்களே ஆகி இருந்தது.

குழந்தையை வாங்கிக்கொண்ட ரயில்வே போலீஸார் மர்ம பெண் மீது குழந்தையை விட்டுச் சென்றதாக கூறி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையை விட்டுச்சென்ற பெண் காண்டேஷ்வர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணை தேடி வருகின்றனர்.
கடந்த வாரம் தான் பன்வெலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதி குழந்தையை அனாதை ஆசிரமத்திற்கு வெளியில் பிளாஸ்டிக் கூடையில் வைத்துவிட்டுச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.