கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!
படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்பில் தேர்ச்சியடையாமல் இருக்கிறார். ஆனால் எப்படியும் 12வது வகுப்பில் தேர்ச்சியடைந்துவிட வேண்டும் என்பதால் நில் தேசாய் உறுதியாக இருக்கிறார். நவ்சாரி மாவட்டத்தில் உள்ள தலோத் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் நில் தேசாய் இப்போது பி.எச்.டி முடித்து முனைவராக இருக்கிறார். ஆனால் 12வது வகுப்பு தேர்வை 26 முறை எழுதியும் அதில் தோல்வியை சந்தித்து வருகிறார். இது குறித்து நில்தேசாய் கூறுகையில், ''1989ம் ஆண்டு நான் 10வது வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பொறியாளராக வேண்டும் என்ற நோக்கில் நான் 12வது வகுப்பு படித்தபோது 1991ம் ஆண்டு அதில் தோல்வி அடைந்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் என்று கருதி மீண்டும் தேர்வு எழுதினேன்.

ஆனால் அதிலும் தோல்வியே மிஞ்சியது. இதனால் 10வது வகுப்பு தகுதியை வைத்து டிப்ளோமா படித்தேன். 1996ம் ஆண்டு டிப்ளோமா முடித்தேன். 2005ம் ஆண்டு மாநில அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதில் டிப்ளோமா படித்தவர்கள் டிகிரி படிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து எனது டிப்ளோமாவை வைத்து பி.எஸ்.சி, மற்றும் எம்.எஸ்.சி முடித்தேன். 2018ம் ஆண்டு பி.எச்.டியும் முடித்துவிட்டேன். ஆனால் இன்னும் என்னால் 12வது வகுப்பில் தேர்ச்சியடைய முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் 12வது வகுப்பில் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து 12வது வகுப்பு தேர்வை எழுதிக்கொண்டே இருந்தேன்.
ஆனால் இது வரை 26 முறை எழுதிவிட்டேன். அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இனி அடுத்த ஆண்டு மீண்டும் அதே தேர்வை எழுத இருக்கிறேன். பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வெற்றி எனக்கு மேலும் ஊக்கமளித்து இருக்கிறது. எனவே எனது 12வது வகுப்பு தேர்ச்சி கனவை கைவிடமாட்டேன். எப்படியும் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக சமூக சேவையில் நான் ஈடுபட்டு வருகிறேன். பி.எச்.டி முடித்திருந்தாலும், வேறு எங்கும் வேலைக்கு செல்லாமல் எனது வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக சொந்த ஊரில் தங்கிவிட்டேன். அப்படி தங்கி இருப்பதால் சமூக சேவையிலும் ஈடுபட முடிகிறது. எங்களது பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கன்றுகளை நட்டு இருக்கிறேன். குஜராத் முழுவதும் 7 இடங்களில் மியாவாகி வனப்பகுதியை உருவாக்கி இருக்கிறேன். அதோடு 150 ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்றை புதுப்பித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இதே போன்று மேலும் 20 கிணறுகளை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம். மேலும் நவ்சாரி மாவட்டம் முழுக்க எங்களது ஹரியாலி குரூப் மூலம் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம்.
எனது சேவையை பார்த்த கிராம மக்கள் என்னிடம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் படி கேட்டுக்கொண்டனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தலில் போட்டியிட்டேன். மொத்தம் 3633 வாக்குகள் பதிவாகி இருந்தது. அதில் எனக்கு 2907 வாக்குகள் கிடைத்துள்ளது'' என்று தெரிவித்தார். தனது கிராமத்தை 5 அம்ச கொள்கையின் அடிப்படையில் மாதிரி கிராமமாக மாற்ற உறுதிபூண்டுள்ள நில் தேசாய் வரும் ஆண்டில் எப்படியும் 12வது வகுப்பில் தேர்ச்சியடைந்துவிடுவேன் என்றும், அதற்கு இன்னும் அதிக நேரம் இப்போது கிடைத்து இருக்கிறது என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.