ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:
அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் தங்களது பணிக் காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் பெற்றுக் கொள்ளலாம். அந்தத் தொகை இதுவரை பெண்களுக்கு ரூ.10 ஆயிரமாகவும், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரமாகவும் இருந்தது. இதனை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், திருமண முன்பணத் தொகையானது அனைத்து அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களது குழந்தைகளுக்கும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி அல்லது தந்தை, தாய் ஆகிய இருவருமே அரசு ஊழியராக இருக்கும்பட்சத்தில், யாரேனும் ஒருவருக்கு மட்டுமே முன்பணத் தொகை வழங்கப்படும்.
முன்பணத் தொகை முழுவதும் தனிநபா் பாதுகாப்பு பத்திரத்தின் வழியாக விடுவிக்கப்படும். திருமண தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தொகை வழங்கப்படும். முன்பணத் தொகையானது 36 மாதங்களில் பிடித்தம் செய்யப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.