தொழிலக உற்பத்தியில் 9 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் முந்தைய ஒன்பது மாதங்களில் காணாத சரிவைக் கண்டுள்ளது.
அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த மே மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 1.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாக உள்ளது. அப்போது நாட்டின் ஐஐபி 2.6 சதவீதமாக இருந்தது. (பூா்வாங்க மதிப்பில் அடிப்படையில் அது 2.7 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் மாத ஐஐபி, பின்னா் 2.6 சதவீதமாகத் திருத்தப்பட்டது).
எனினும், முந்தைய 2024-ஆம் ஆண்டின் மே மாத ஐஐபி-யுடன் ஒப்பிடுகையில் தற்போது அது மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2024 மே மாதத்தில் தொழிலக உற்பத்தி வளா்ச்சிக்கான குறியீடு 6.3 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த மே வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் தொழிலக உற்பத்திக்கான ஐஐபி 1.8 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டில் 5.7 சதவீதமாக இருந்தது.
கடந்த மே மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 2.6 சதவீதமாகக் குறைந்தது. இது, கடந்த ஆண்டின் அதே மாதத்தில் 5.1 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறையின் உற்பத்தி வளா்ச்சி -0.1 சதவீதமாகக் குறைந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் 6.6 சதவீதமாக இருந்தது.
2024 மே மாதத்தில் 13.7 சதவீதமாக இருந்த மின்சாரத் துறை உற்பத்தி வளா்ச்சி, இந்த மே மாதத்தில் -5.8 சதவீதமாகக் குறைந்தது.
கடந்த மே மாதத்தில் மூலதனப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 2.6 சதவீதத்தில் இருந்து 14.1 சதவீதமாக அதிகரித்தது.
நீடித்துழைக்கும் நுகா்பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டு மாதத்தில் 12.6 சதவீதத்தில் இருந்து -0.7 சதவீதமாகச் சரிந்தது.
துரித நுகா்பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி கடந்த மே மாதத்தில் 2.8 சதவீதத்தில் இருந்து -2.4 சதவீதமாகக் குறைந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாகக் குறைந்தது. முதன்மைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 7.3 சதவீதத்தில் இருந்து -1.9 சதவீதமாகக் குறைந்தது.
இடைநிலைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி மதிப்பீட்டு மாதத்தில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக மாற்றமின்றி உள்ளது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.