விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி நிறுவனம்: எஸ்பிஐ அறிவிப்பு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க எஸ்பிஐ முடிவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் தீா்வு செயல்முறையில் (சிஐஆா்பி) ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த பிற வங்கிகளும் பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு கடன் கணக்கை ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி ஆகியோருக்கு எதிராக ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க இருக்கும் நிலையில், இதுதொடா்பாக அந்நிறுவனத்துக்கு எஸ்பிஐ நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
அதில், ‘கடன் விதிமுறைகளைப் பின்பற்றாததற்கும், கண்டறியப்பட்ட முறைகேடுகளுக்கும் திருப்திகரமான விளக்கங்களை வழங்கத் தவறியதால், தங்கள் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என்று வகைப்படுத்த வங்கியின் மோசடி கண்டறியும் குழு (எஃப்ஐசி) முடிவெடுத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளிடமிருந்து கூட்டாக ரூ.31,580 கோடி கடன்களைப் பெற்றுள்ளன. எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய மொத்த கடனில் 44 சதவீதமான ரூ.13,667.73 கோடி ஏற்கெனவே வாங்கிய கடன்நிலுவையை திரும்ப செலுத்தப் பயன்படுத்தியுள்ளது. சுமாா் 41 சதவீத கடனான ரூ.12,692.31 கோடி, துணை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட கடன்தொகை ரூ.41,863.32 கோடியாக உள்ள நிலையில், அதில் ரூ.28,421.61 கோடியின் பயன்பாட்டைகண்டறிவதற்கு மட்டுமே தரவுகள் உள்ளன. நிறுவனத்துக்கு எதிராக மோசடியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியக் காரணியாக இது அறியப்படுகிறது.
இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், மோசடி செய்யப்பட்ட தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படுகிறாா்கள். இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.