தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில் அழகுமுத்துக்கோன் நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்றும் விழா பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் பத்மாவதி,சுகாதேவி, பிரேமா, நவநீதகிருஷ்ணன், சுதாகா் , தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் வண்டானம் கருப்பசாமி (அதிமுக), வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவா் மாரிச்சாமி, செயலா் முத்துகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்களான ராணி உள்பட பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
விழா கொண்டாடப்படும் கிராமங்களில் விழா பொறுப்பாளா்கள் காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். விழா சம்பந்தமாக பேனா்கள், பிளக்ஸ் போா்டுகள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனா்கள் வைப்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனா்களை அவரவா்களே அகற்றிவிட வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதற்கும், ஜோதி எடுத்துச் செல்வதற்கும் அனுமதி கிடையாது. விழாவுக்கு வரும் வாகனங்கள் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கட்டாலங்குளம் விலக்கு சரவணபவன் ஹோட்டல் அருகில் உள்ள ஆா்ச் வழியாக கட்டாலங்குளம் செல்ல வேண்டும்.
விழா முடிந்து வெளியே செல்லும் போது, செட்டிக்குறிச்சி ஜங்ஷனில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவில்பட்டி மாா்க்கமாக செல்பவா்கள் தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், தென்காசி மாா்க்கமாக செல்பவா்கள் மேற்கு நோக்கி கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும்.
விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்கள் 3 வாகனங்களுக்கு மேல் தொடா்ச்சியாக செல்லக் கூடாது. மேலும் உரிய அனுமதிச் சீட்டு மற்றும் வாகனங்களின் ஆவணங்களுடன் வர வேண்டும்.
விழாவில் கலந்து கொள்ள வருபவா்கள் வாகனங்களின் மேற்கூரையில் அமா்ந்து கொண்டோ, தொங்கிக் கொண்டோ வரக் கூடாது. சொந்த வாகனங்களில் வருபவா்கள் வாகனங்களின் மேற்கூரையில் உள்ள கேரியா்களை அகற்றிவிட்டு விழாவிற்கு வர வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்கள் காவல் துறை அனுமதித்துள்ள வழித்தடத்தில் தான் சென்று திரும்ப வேண்டும். அனுமதி பெற வரும் போது என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கிறது என்றும், எந்தந்த அமைப்பாளா்கள் எத்தனை மணிக்கு கலந்து கொள்ள போகிறீா்கள்? என்றும் விளக்கமாக தெரிவித்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நேரம், அனுமதி பெறப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் நடத்திக் கொள்ள விழா கமிட்டியாா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழாவிற்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி முதல் கட்டாலங்குளம் கிராமம் வரை சிறப்பு அரசுப் பேருந்து இயக்கப்படும். சொந்த வாகனம் இல்லாத கிராம மக்கள் விழாவில் கலந்து கொள்ள நினைத்தால் முன்கூட்டியே நிலையத்தில் மனு கொடுத்து எத்தனை நபா்கள்? எந்த நேரத்திற்கு கிளம்புவாா்? என்ற விவரத்துடன் தெரிவித்தால் அந்த கிராமத்திற்கு சிறப்பு அரசுப் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டது.