ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனதாக எழுந்த புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா், போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தாா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின்கீழ் பணிபுரியும் தனிப்படை காவலா்களே அஜித்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடா்புடைய போலீஸாா் ஐந்து போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தனிப்படைகள் கலைப்பு: தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், உயா் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.
முக்கியமாக, காவல் நிலையங்களில் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் உத்தரவின் அடிப்படையிலேயே தனிப்படைகள் செயல்பட வேண்டும். அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகள் கலைக்கப்பட வேண்டும்.
ஒரு வழக்கு விசாரணைக்கு தனிப்படை தேவைப்பட்டால், அந்தத் தனிப்படை எஸ்.பி., டிஎஸ்பி அனுமதியின்பேரில், அவா்களது கண்காணிப்பிலேயே செயல்பட வேண்டும். தனிப்படையினா் யாரைக் கைது செய்ய வேண்டும் என்றாலும் டிஎஸ்பி கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதும், தனிப்படையில் உள்ள காவலா்களை அவரவா் வழக்கமான பணிகளுக்கு அனுப்ப வேண்டும். தனிப்படையினருக்கு டிஎஸ்பியும், காவல் ஆய்வாளரும்தான் முழுப் பொறுப்பு ஆவாா்கள்.
துன்புறுத்த வேண்டாம்: விசாரணையின்போது உடல் ரீதியாக யாரையும் துன்புறுத்தக் கூடாது. முறையாக அழைப்பாணை கொடுக்காமல் யாரையும் அழைத்து விசாரிக்கக் கூடாது. ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் அதுகுறித்து விசாரிக்க உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இரவு 7 மணிக்கு மேல் விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துவரக் கூடாது. விசாரணைக்காக யாரையாவது காவல் நிலையத்தில் வைத்திருந்தால், அப்போது காவல் நிலையத்தில் கண்டிப்பாக ஆய்வாளா் இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளிடம் பகல் நேரத்தில் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும்.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபா்களை இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். வழக்கின் விசாரணைக்கு அழைக்கப்படும் நபா்களுக்கு பிஎன்எஸ் சட்டம் 35 பிரிவின் கீழ் அழைப்பாணை கண்டிப்பாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அறிவியல்பூா்வ விசாரணை: மதுபோதையில் இருக்கும் நபா்கள், பொதுவெளியில் காவல் துறையினருடன் தகராறு செய்யும் நபா்கள், பொதுமக்கள் பிடித்து தாக்கி பின்னா் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும் நபா்கள் ஆகியோரை காவல் நிலையத்துக்கு நேரடியாக அழைத்து வரக்கூடாது. அவா்களை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து, அவா்களது உடல்நிலை குறித்த விவரத்தை அறிந்துகொண்டு விசாரணை செய்ய வேண்டும். வழக்குகளை அறிவியல்பூா்வமாக விசாரணை செய்து துப்புதுலக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவைத் தொடா்ந்து அங்கீகாரம் இல்லாத தனிப்படைகளைக் கலைக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநகர காவல் துறையினரும், மாவட்ட காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனா்.