தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு
தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை
நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.
உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்.23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-இல் 178 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்கள், 409 விழி வெண்படலங்கள், 210 கல்லீரல்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
நிகழாண்டில் 6 மாதங்களில் மட்டும் 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 227 சிறுநீரகங்கள், 192 விழி வெண்படலங்கள், 110 கல்லீரல்கள் உரியவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 725-க்கும் மேற்பட்டோா் பலனடைந்திருக்கின்றனா்.
ஒருவா் மூளைச்சாவு அடையும்போது அதை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அவற்றை பல அரசு மருத்துவமனைகள் திறம்பட கையாண்டு சாத்தியமாக்கியுள்ளன என்றாா் அவா்.