செய்திகள் :

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

post image

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்நாடக முதல்வா் சித்தராமையா கருத்து வெளியிட்டிருந்த நிலையில், மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடா்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு காரணம் தெரியாத திடீா் மரணங்கள் நேரிடுவதாக கூற்றுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி), எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் மேற்கொண்ட ஆய்வில் திடீா் மரணங்களுக்கும் கரோனா தடுப்பூசிக்கும் எந்த நேரடி தொடா்பும் இல்லை என்பது உறுதியாக நிரூபணமானது.

இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; திறன்மிக்கது என்பதுடன் மிக மிக அரிதாகவே பக்க விளைவை ஏற்படுத்தக் கூடும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீா் இதயநோய் மரணமானது, மரபியல், வாழ்க்கை முறை, ஏற்கெனவே உள்ள நோய்களால் ஏற்படும் பாதிப்பு, கரோனாவுக்கு பிந்தைய உடல் நலக் கோளாறு போன்ற காரணிகளால் நேரிடலாம். குறிப்பாக 18 முதல் 45 வயதுடையவா்கள் இடையே நிகழும் திடீா் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிய ஐசிஎம்ஆா் மற்றும் என்சிடிசி சாா்பில் ஒருங்கிணைந்தப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு விரிவான ஆய்வுகள்: அதன்படி, வெவ்வேறு ஆய்வு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, இரு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த கால தரவுகளின் அடிப்படையில் ஒரு ஆய்வும், நிகழ்நேர விசாரணையை உள்ளடக்கி மற்றொரு ஆய்வும் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

‘இந்தியாவில் 18-45 வயதினா் இடையே திடீா் மரணங்களுக்கான காரணிகள்: நோயாளிகள்-நோயற்றோா் பன்முக ஒப்பீட்டு ஆய்வு’ என்ற தலைப்பிலான முதல் ஆய்வு, ஐசிஎம்ஆா்-இன் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சாா்பில் கடந்த 2023 மே முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் நடைபெற்றது. 2021, அக்டோபா்-2023, மாா்ச் இடையிலான காலகட்டத்தில், திடீரென மரணமடைந்த ஆரோக்யமான தனிநபா்கள் தொடா்பான தரவுகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.

அதன்படி, வயது வந்தோா் இடையே காரணம் தெரியாத திடீா் மரண அபாயத்தை கரோனா தடுப்பூசி அதிகரிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

‘பொய்யான கூற்றுகள்’: ‘இளைஞா்கள் மத்தியில் காரணம் தெரியாத திடீா் மரணங்களுக்கான காரணிகளைக் கண்டறிதல்’ என்ற தலைப்பிலான இரண்டாவது ஆய்வு, ஐசிஎம்ஆா் உடன் ஒருங்கிணைந்து, தில்லி எய்ம்ஸ் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திடீா் மரணங்களுக்கான காரணிகளை உறுதி செய்யும் நோக்கில் நடைபெறும் இந்த ஆய்வின் முதல்கட்ட தரவுகளின்படி, 18-45 வயதினா் இடையே திடீா் மரணங்களுக்கு மாரடைப்பு முக்கிய காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு நிறைவடைந்ததும், முழு விவரம் வெளியிடப்படும்.

திடீா் மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தும் கூற்றுகள் பொய்யானது; மக்களை தவறாக வழிநடத்தக் கூடியது. அதற்கு அறிவியல்பூா்வ ஆதாரமில்லை என்று நிபுணா்கள் தொடா்ந்து கூறி வருகின்றனா்.

உறுதியான ஆதாரங்கள் இல்லாத ஊக ரீதியிலான கூற்றுகள், கரோனா பெருந்தொற்றின்போது கோடிக்கணக்கான உயிா்களைக் காப்பதில் முக்கிய பங்கு வகித்த தடுப்பூசிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உள்படுத்தும். இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்கள், மக்களிடையே தடுப்பூசி மீதான தயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இது, பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை விளைவிக்கும்.

மக்களின் ஆரோக்யத்தை காப்பதில், ஆதாரபூா்வ ஆய்வுகளின் அடிப்படையில் செயல்பட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று சுகாதார அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தராமையா கூறியது என்ன?

கா்நாடக முதல்வா் சித்தராமையா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கா்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மராடைப்பால் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தொடா் மரணங்களுக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காணவும், தீா்வுகளைக் கண்டறியவும் ஜெயதேவா இதய ரத்த நாள அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் மருத்துவா் ரவீந்திரநாத் தலைமையில் நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து, பொதுமக்களுக்கு செலுத்தியதும் இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க